சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அமைச்சர் மா. சுப்ரமணியன் நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்தார்.
பிறகு, சிகிச்சையில் இருக்கும் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சம்பவத்தின் பின்னணியையும் காவல்துறையினரிடம் கேட்டார்.
மருத்துவமனையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார்.
அதாவது, மருத்துவர் பாலாஜியிடம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன், தனது தாய்க்கு நோய் குணமாகவில்லை என்ற ஆத்திரத்தில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், சிகிச்சையளித்தும் தாய் குணமடையாததாலும், உடன் இருந்தவர்கள் ஏதேதோ கூறியதைக் கேட்டு, உணர்ச்சிவேகத்தில் கையில் வைத்திருந்த கத்தியால் மருத்துவரைக் குத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தாயின் சிகிச்சைக்காக, தொடர்ந்து ஆறு மாதங்கள் இந்த மருத்துவமனையில் தாயுடன், கத்திக்குத்தில் ஈடுபட்ட இளைஞர் தங்கியிருந்திருக்கிறார். அதனால், இங்கு அவர் வரும்போது யாருக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. அவர் மற்ற அனைவரையும் போல சாதாரணமாகவே உள்ளே வந்து மருத்துவரைக் குத்தியிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவம் என்ன?
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று, புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜி மீது, விக்னேஷ் என்பவர், தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திய சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சம்பவம் நடந்த மருத்துவமனையில் தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.