
வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.
கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதிகாலை 2 மணிக்கு கழிப்பறையின் வாயிலில் தொடர் வண்டி போல மிகப்பெரிய வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் இரண்டு மணி நேரம் இந்த வரிசையில் காத்திருந்தால்தான், கழிப்பறைக்குள் நுழைய முடியும் என்ற நிலை.
ஒவ்வொரு வளாகத்திலும் பயன்படுத்தக்கூடிய அளவில் வெறும் 3 கழிப்பறைகளே மட்டும் இருக்கும் நிலையில், ஒவ்வொன்றிலும் 70 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறை வளாக வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு சிறைக் கைதியும் காலை 5.30 மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். அதுபோல, அனைத்திந்திய சிறைக் கைதிகளுக்கான ஆணைய வழிகாட்டுதல்படி, ஒரு சிறையில் 6 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இது ஒன்றும் பயனில்லை என்பது போல, கழிப்பறை குறைவாக இருப்பதால் நள்ளிரவிலேயே கழிப்பறை வாசலில் கால் வலிக்கக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த ஜூலை மாதம், வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு நபர், இது பற்றி எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு தெரிவித்த தகவலில், அனைவருமே அதிகாலையில் எழுந்து வரிசையில் நின்றுதான் கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறார்.
நான் அதிகாலையிலேயே எழுந்து, கழிப்பறையை அடைந்தாலும், எனக்கு முன்பு 30 பேர் பல மணி நேரமாக கழிப்பறை வாசலில் காத்திருப்பதைப் பார்க்க முடியும். சரி. கழிப்பறை சுத்தமாக இருக்குமா என்றால் இருக்காது, அதிலும் அடிப்படை வசதிகள் கூட இருக்காது. எனவே, பல சிறைக் கைதிகளும் மிக விரைவாக உறங்கச் சென்றுவிடுவார்கள். அப்போதுதான் நள்ளிரவில் எழுந்து வரிசையில் நிற்க முடியும் என்கிறார்கள் சிறைக் கைதிகள்.
ஆண்கள் சிறைப் பிரிவுக்கு வெளியே 24 கூடுதல் கழிப்பறைகள் உள்ளன. ஆனால், அவை பயன்படுத்த முடியாத அளவில் இருக்கின்றன.
இந்த 24 கழிப்பறைகளையும் சரி செய்தால், அங்கிருக்கும் சிறைக் கைதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், இது பற்றி கைதிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தாலும், அதனை சரி செய்ய சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானவர் கூறியுள்ளார்.
சிறைவார்டன் அறைக்கு அருகேதான், புகார் பெட்டி உள்ளது. எனவேதான், சிறைக் கைதிகள் அதில் புகார் மனுவை போடுவதற்குக் கூட பயப்படுகிறார்கள். சிறை அறைக்கே அருகே தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தால் நல்லது என்றும் கூறுகிறார்கள்.
இதில், கைதிகளுக்கு மட்டும்தான் இந்த நிலையா என்றால் இல்லை. சிறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தனியாக கழிப்பறைகள் இல்லை. அங்கு, மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்காக இருக்கும் ஒரு சில கழிப்பறைகளைத்தான் ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கின்றன தகவல்கள்.
மாதிரி சிறைக் கையேடு, 2016ல் கூறப்பட்டிருப்பதன்படி, உள்துறை அமைச்சகம் கைதிகளுக்கு சுகாதாரமான வாழ்விடம் மற்றும் தனிப்பட்ட தூய்மையைப் பராமரிக்கும் தங்குமிடங்கள், போதுமான சுத்தமான ஆடை மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால்.. எத்தனை சிறைச்சாலைகள் இதனை பூர்த்தி செய்கின்றன என்பது கேள்விக்குறியே?
இதுகுறித்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமனிடம் கேட்டபோது, ரிமாண்ட் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகளுக்கு போதுமான கழிப்பறைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, புகார் பெட்டிகளும் மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
அந்தப் பெட்டிகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்லும் போது, அவை பெரும்பாலும் காலியாகவே இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.