சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் எங்கே? எப்போது? கரையைக் கடக்கும் என்று இதுவரை துல்லியமாகக் கணிக்கப்படவில்லை.
நவ. 29ஆம் தேதிவரை, இந்த புயல் சின்னமானது கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மழை தொடர்பான தகவல்களை கணித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துவரும் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் இன்று புயல் சின்னம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம்.
இதனால், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னைக்கு மிகச் சிறப்பான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் சின்னமானது கரையைக் கடக்கும்வரை தெற்கு சென்னைக்கு மழை வாய்ப்பு உள்ளது. சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எல்லாம் மழை கிடைக்கும். இது மழை தொடர்பான தற்காலிக கணிப்புதான்.
27ஆம் தேதி - சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். - புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரும்.
28ஆம் தேதி - சென்னையில் நாளை மிதமான மழை பெய்யும். - புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரும்.
29ஆம் தேதி - சென்னைக்கு கனமழை கிடைக்கும் - மேற்கு நோக்கி புயல் சின்னம் நகரும்.
30ஆம் தேதி - சென்னைக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யும் - மேற்கு நோக்கி புயல் சின்னம் நகரும்.
டிச. 1ஆம் தேதி - சென்னைக்கு மிதமான மழை - காற்றின் இழுவையின் விளைவாக
டிச.2ஆம் தேதி - சென்னைக்கு மிதமான மழை - காற்றின் இழுவையின் விளைவாக
புயல் சின்னமான கரையைக் கடந்துவிட்டால், உள்ளூர் மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கொங்கு மண்டலங்களும் மிகச் சிறப்பான மழையைப் பெறும்.