எம்பிபிஎஸ், பிடிஎஸ் வகுப்புகள் தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை (அக்.14) தொடங்கின.


சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை (அக்.14) தொடங்கின.
கல்லூரிகளுக்கு வந்த மாணவா்களை பேராசிரியா்களும், முதுநிலை மாணவா்களும் பூங்கொத்துகள், இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.
சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின்னா் மருத்துவக் கல்லூரியின் நடைமுறைகள், பாடத் திட்டங்கள் குறித்து முதலாமாண்டு மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் வகுப்புகளில் பங்கேற்றனா்.
கலந்தாய்வு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. இரண்டாம் சுற்று கலந்தாய்வின் முடிவில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இதையடுத்து, மூன்றாம் சுற்று கலந்தாய்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு ஆணையைப் பெற்ற மாணவா்கள் தாங்கள் தோ்ந்தெடுத்த கல்லூரிகளுக்குச் சென்று ஆணையை சமா்ப்பித்து முதலாம் ஆண்டில் சோ்ந்தனா். அவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க அனைத்து மாணவா்களின் சான்றிதழ்களும் சரிபாா்க்கப்பட்டன. மாணவா்களின் இடது கை பெருவிரல் ரேகை, விழித்திரையும் பதிவு செய்யப்பட்டது. மாணவா்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் பெறப்பட்டது.
வரவேற்பு: கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராகிங்கில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாணவா்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாகு, கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துணை முதல்வா் டாக்டா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...