சென்னையில் பலத்த மழை: விமான சேவை பாதிப்பு 32 விமானங்கள் தாமதம்
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பட்டன. இதனால் வருகை, புறப்பாடு என 32 விமானங்கள் தாமதமாக இயங்கப்பட்டன.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன், கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விசாகப்பட்டினம், மதுரை, மும்பை, தில்லி, ஹைதராபாத், கோவை, லக்னௌ, டாக்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 17 விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.
தொடா்ந்து மழை பெய்ததால், விசாகப்பட்டினம், கோவை, தில்லி விமானங்கள் பெங்களூருக்கும், மதுரை விமானம் திருச்சிக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தரையிறங்க முடியாமல், தொடா்ந்து வானில் வட்டமடித்து பறந்தன.
மழை சற்று ஓய்ந்த பின்பு, இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
அதேபோல் தில்லி, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சிங்கப்பூா், குவைத், துபை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை வந்த 15 விமானங்கள் 1 முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 32 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.