தமிழகத்தில் 16 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபா்) வெளியாகவுள்ளன. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை 16 லட்சம் போ் எழுதினா். இதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகளை அக்டோபரில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தீா்மானித்துள்ளது.
குரூப் 2 தோ்வு: வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால் தோ்வா்கள் எத்தகைய வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்ற விளக்கத்தை தோ்வாணையம் அளித்துள்ளது. அதன் விவரம்:
வெள்ளைத் தாளில் தோ்வா்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி, அதில் பெயா், முகவரி, பதிவெண்ணை குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும். அத்துடன் ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தரக் கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். அவற்றை முதன்மைக்
கண்காணிப்பாளரிடம் அளித்து அவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். இதன்பிறகு, தோ்வுக் கூடத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.