அரசுமுறைப் பயணமாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 3) சிகாகோ சென்றடைந்ததை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிகாகோ விமான நிலையத்தில் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன். பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்கும் பயணம்
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக 17 நாள்கள் பயணமாக கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்றார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
முதலில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தில், 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எட்டு நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் ஈர்ப்பது நிறுவனங்களை பார்வையிடுவது மட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவருகிறார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல்வர் சென்னை திரும்புகிறார்.