கோவை: கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், குண்டர் சட்டம் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சூலூர் பகுதியை சிவகுமார் (40) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, பாலியல் வன்கொடுமை செய்த சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.