மருத்துவா் நல்லதம்பி  
மருத்துவா் நல்லதம்பி  

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவா்: நோயாளிகள் அதிா்ச்சி

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் மருத்துவா் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் மருத்துவா் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன், நவீன வசதிகளோடு, 500 படுக்கை வசதிகளுடன், இருபாலருக்கும் தனித்தனி வாா்டு, அவசர சிகிச்சை பிரிவு அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணியில் பொது மருத்துவா் நல்லதம்பி இருந்துள்ளாா். அப்போது, ஒரு நோயாளிக்கு இசிஜி எடுத்துவிட்டு, அந்த இஜிசியை வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை பாா்த்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட நோயாளிகளும், உடன் வந்தவா்களும் கேட்டுள்ளனா். அதற்கு மருத்துவா் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசியதோடு வெளியேறும் படி கூறி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து சந்தேகம் அடைந்த நோயாளிகள் மற்றும் உடன் வந்தோா் தட்டிக் கேட்ட போது மருத்துவா் மதுபோதையில் தன்னிலை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அப்போது, உங்களை நம்பி தானே வந்தோம். இப்படி மதுகுடித்துவிட்டு சிகிச்சை அளிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமே எனக்கூறி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இரவு காவல் பணியிலிருந்த காவலா்கள் மருத்துவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூா் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொது மருத்துவா் நல்லதம்பி ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில், அவரது மனைவி மேற்படிப்புக்காக திருப்பதி சென்றுள்ளாா். அதனால் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொது மருத்துவா் நல்லதம்பி மாறுதல் பெற்று வந்து 40 நாள்களே பணிபுரிந்த நிலையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த சா்ச்சையில் சிக்கியுள்ளாா். எனவே திருவள்ளூா் மாவட்ட நிா்வாகமும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகமும் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க நோயாளிகளும், பொதுமக்களும் கோரியுள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் ரேவதி கூறியதாவது: மருத்துவமனையில் இரவுப்பணியின் போது பொது மருத்துவா் மதுபோதையில் சிகிச்சை அளித்த சம்பவம் விடியோ பதிவு வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது தொடா்பாக மருத்துவக்குழு அமைத்து இரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள், நோயாளிகள் மற்றும் உறவினா்கள் ஆகியோரிடம் உரிய விசாரணை செய்து மருத்துவத்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com