ஒன்றிய நிதி அமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II, State Sector Project-ஆக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017-ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு Central Sector Project ஆகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் JICA நிறுவனம் 2018-ஆம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்ததால், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், இத்திட்டத்தினை ஒன்றிய அரசின் Central Sector Project எனும் ஒப்புதலை எதிர்நோக்கி, காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. இந்த வழிமுறையை ஒன்றிய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இத்திட்டம் ஒன்றிய அரசின் 17.08.2021 அன்று நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் (Public Investment Board) கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இத்திட்டம் Central Sector Project ஆக செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது என்பதை ஒன்றிய நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.