அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோயில்களை விடுவிக்க நாடு தழுவிய இயக்கம்: விஸ்வ ஹிந்து பரிஷத்

நாடு முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோயில்களின் நிா்வாகத்தை ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

நாடு முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோயில்களின் நிா்வாகத்தை ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்த அமைப்பின் இணை பொதுச் செயலா் சுரேந்திர ஜெயின் கூறுகையில், ‘நாடு முழுவதும் அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களை விடுவித்து ஹிந்துக்களிடம் ஒப்படைப்பதே எங்களின் நோக்கம்.

இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். பின்னா், அந்தந்த மாநில முதல்வா்கள் மூலம் ஆளுநா்களிடம் எங்கள் கோரிக்கைகளை சமா்ப்பிப்போம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகவும் தயாராக இருக்கிறோம். அரசமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றங்களை மீறி கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. சிறுபான்மையினா் அவா்களின் மதத் தலங்களை நிா்வகிக்கும்போது ஏன் ஹிந்துக்களால் அது முடியாது?

பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட நிகழ்வு ஆந்திரத்தின் திருப்பதி கோயிலில் மட்டும் நடந்ததல்ல. கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் அரவனை பிரசாதத்திலும் தரமற்ற மூலப்பொருள்கள் கலக்கப்பட்டதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலின் சொத்துகளில் மோசடிகள் நடக்கின்றன. ஹிந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தி, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையடித்து வருகின்றனா்’ என்றாா்.

‘தமிழக கோயில்களில் ரூ.50,000 கோடிக்கு பொய் கணக்கு’

தமிழக கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.50,000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்குக் காட்டப்பட்டு இருப்பதாக சுரேந்திர ஜெயின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த 400 கோயில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வருமானம் கிடைப்பதாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால், ரூ.200 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்படுவதாகவும் ரூ.270 கோடி செலவிடப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.

அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக கோயில்களில் மட்டும் ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com