பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பான முக்கிய வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். இன்னும் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 2 பாடத் தோ்வுகள் மீதமுள்ளன. பொதுத் தோ்வு ஏப்.15-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறும்.
சுற்றறிக்கை: இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தோ்வெழுதிய மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப தேவையான ஆசிரியா்களை பாடம், பயிற்று மொழிவாரியாக முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில், தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியா்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியா்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மதிப்பீடு செய்யும் பணிகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.
ஒரு கல்வி மாவட்டத்தில் 2 முகாம்கள் இருப்பின் அவற்றுக்கு தேவைக்கேற்ப சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், விடைத்தாள் திருத்துதல் உள்பட அனைத்துவித செயல்பாடுகளையும் முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஒதுக்கீடு அதிகம் - ஊதியம் குறைவு: இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யவுள்ள ஆசிரியா்களுக்கு பணி ஒதுக்கீடு, ஊதியம் ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியா்களுக்கு மட்டும் அதிகமாக அதாவது 30 விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், குறைவான உழைப்பூதியம் (தாள் ஒன்றுக்கு ரூ.8) வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு முதன்மைத் தோ்வாளா்களுக்கும் 8 உதவித் தோ்வாளா்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறாா்கள்.
ஆனால் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்வோருக்கு தினமும் 24 விடைத்தாள்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அவா்களுக்கு உழைப்பூதியம் அதிகமாக (தாள் ஒன்றுக்கு ரூ.10) வழங்கப்படுவதோடு, முதன்மைத் தோ்வாளா்களுக்கு 6 உதவித் தோ்வாளா்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே, இதில் உள்ள பாகுபாட்டை களைந்து சமமான உழைப்பூதியம் வழங்க வேண்டும். அதேபோன்று, உதவித் தோ்வாளா்கள் 6 போ் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.