குடும்ப அரசியல் திமுக அரசை பாஜக - அதிமுக கூட்டணி வேரோடு அகற்றும்: மத்திய அமைச்சர்

தமிழ்நாட்டில் ஊழல், குடும்ப அரசியல், தோல்வியுற்ற திமுக அரசை பாஜக - அதிமுக கூட்டணி பிடுங்கும் என்றார், கிஷன் ரெட்டி.
பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணிX | G Kishan Reddy
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் தோல்வியுற்ற திமுக அரசை பாஜக - அதிமுக கூட்டணி வேரோடு பிடுங்கச் செய்யும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளனர். கூட்டணி அறிவிக்கப்பட்டதையடுத்து, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் வலுவடைந்துகொண்டே இருக்கிறது. பாஜக - அதிமுக கூட்டணி, தமிழ்நாட்டில் ஊழல், குடும்ப அரசியல், தோல்வியுற்ற திமுக அரசை வேரோடு பிடுங்கச் செய்யும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தக் கூட்டணி, தமிழ்நாட்டின் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையும் வலுப்படுத்தும். மேலும், மாநிலத்தின் நலன், ஊழலற்ற ஆட்சி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை வழங்கவும் முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, "அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியைத்தான், தமிழ்நாட்டு மக்கள் அந்த அணிக்குக் கொடுத்தார்கள். ஆனால், இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை, வக்ஃப் சட்டம், தொகுதி மறுசீரமைப்பு குறித்து வலியுறுத்துவதாகக் கூறுகிறது, அதிமுக. இவையெல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.,வையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர். பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை - தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக்கொள்ள பா.ஜ.க. தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com