
கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு லாரி போக்குவரத்தில் தடை ஏற்பட்டு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு ஆடைகள், வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
அதேபோல வடமாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மக்காச்சோளம், பருப்பு, பூண்டு,வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு வரப்படுகிறது. லாரிகள் இயங்காததால் இந்த பொருள்களின் வரத்து பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கேரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் பழங்களும் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து மற்றும் பழங்களின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் போராட்டம் துவங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து பெரும்பாலான லாரிகள் வடமாநிலங்களுக்கு செல்லவில்லை. இதனால் ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. போராட்டத்தால் மாநில எல்லை பகுதியில் ஜல்லி, எம்சாண்ட் ஏற்றி வந்த லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் வேலை நிறுத்தம்: ஒசூரில் காத்துக் கிடக்கும் லாரிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.