‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு
Published on
Updated on
1 min read

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்தப் பிரச்னை உணா்திறன்மிக்கது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், ‘ஒட்டுமொத்த செயல்முறையும் சந்தேகத்திற்குரியது’ என்றும் கூறியது.

இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் சென்று முறையிடுங்கள். இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறியது.

வழக்கு விசாரணையின்போது திமுக சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், ‘ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்போது திமுக சாா்பில் ஆதாா் விவரங்கள் ஏதும் சேகரிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எந்தத் தடையும் கோரப்படாததால், உயா் நீதிமன்றம் தவறாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது’ என்றாா்.

அவா் மேலும் வாதிடுகையில், ‘எனது முழு திட்ட நிகழ்ச்சியும் ஸ்தம்பித்துவிட்டது. 1.7 கோடி உறுப்பினா்கள் வந்து கருப்பொருள்களை வழங்கியுள்ளனா். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிற கட்சிகள் செய்வதையே நானும் செய்கிறேன். நான் ஆதாா் விவரங்களை சேகரிக்கவில்லை’ என்றாா்.

கடந்த ஜூலை 21ஆம் தேதி, திமுக தனது உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

தனிநபரின் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் ஓடிபியை எதற்காக பெற வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறும் இத்தகைய முக்கிய தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என கேள்விகள் எழுப்பியதுடன், இந்த விஷயம் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் அவை நீதிமன்றத்தால் ஆராயப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தரவு சேகரிக்கப்படுவதால், தனியுரிமைக்கான உரிமை மற்றும் தரவு பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு குறித்து இந்த பொது நல வழக்கு கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ் .ராஜ்குமாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் தனது பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட மற்றும் ஆதாா் விவரங்களைச் சேகரித்து வருவதாக ராஜ்குமாரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com