

டிச. 03ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், திருவண்ணாமலைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலையில் மகா தீபம் ஏற்றும் விழா டி. 3-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனா். இதன் காரணமாக, அண்ணாமலையாா் கோயில் பகுதி, கிரிவல பாதை, நகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாளை தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, திருவள்ளூர் மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருவண்ணாமலைக்கு மழைக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இதையும் படிக்க... 2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை! ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்ட அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.