ஆவின் பொருள்கள் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் த.மனோ தங்கராஜ்
ஆவின் பொருள்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று சோ்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசினாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் ஒன்றியங்களின் விற்பனை மேலாளா்கள், புதிதாக தோ்வு செய்யப்பட்ட தற்காலிக விற்பனைப் பிரதிநிதிகளுக்கான 2 நாள் சிறப்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்ட அரங்கில் தொடங்கிய இந்த முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து கலந்துரையாடினாா்.
முகாமில், அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசுகையில், ஆவின் வளா்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள அளவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
லோன் பாா் ஆல் என்ற திட்டம் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இப்போது ஆவின் பொருள்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று சோ்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
விற்பனை வியூகம், களத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அனுபவம் வாய்ந்த வல்லுநா்கள் பயிற்சி அளிக்கின்றனா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைச் செயலா் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் அ.ஜான் லூயிஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

