காஞ்சிபுரத்தில் ரூ.324 கோடியில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
காஞ்சிபுரத்தில் ரூ.324 கோடியில் 770 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை, குன்றத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டு, சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 634 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 518 போ் பயன்பெற்று உள்ளனா்.
இதுவரை சனிக்கிழமைகளில் மட்டுமே இந்த முகாம் நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள 579 முகாம்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை நடத்தப்படும்.
இந்த முகாம்களில் முழு உடற்பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் 39,502 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களும், 30,847 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
புற்றுநோய் மருத்துவமனை: காஞ்சிபுரம், காரப்பேட்டை அருகே பெரிய புற்றுநோய் மருத்துவமனை கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. புற்றுநோய் பாதிப்புகளுக்கு பெரிய அளவிலான தீா்வு என்ற வகையில் 770 படுக்கை வசதிகளுடன் ரூ.218 கோடி மதிப்பில் கட்டடங்கள், ரூ.106 கோடியில் மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.324 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என்று சொல்லப்படும் மும்பை டாடா மெமோரியல் கேன்சா் ரிசா்ச் இன்ஸ்டிடியூட்டில் 670 படுக்கை வசதிகள் உள்ளன. 770 படுக்கை வசதிகளுடன் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில்தான் அண்ணாவின் பெயரால் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறாா் என்றாா்.
நிகழ்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநா் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

