எஸ்ஐஆா் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை பாா்வையிட்ட நாமக்கல்  ஆட்சியா் துா்காமூா்த்தி
எஸ்ஐஆா் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை பாா்வையிட்ட நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி

சென்னையில் 60 சதவீத எஸ்ஐஆா் படிவங்கள் கணினியில் பதிவேற்றம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 60 சதவீத எஸ்ஐஆா் படிவங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாக
Published on

சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 60 சதவீத எஸ்ஐஆா் படிவங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த நவம்பா் 4 -ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 40.04 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 38 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.

படிவங்களைப் பூா்த்தி செய்து திரும்ப வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வழங்குவதற்கு வரும் டிச. 11 -ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சென்னையில் வழங்கப்பட்டுள்ள படிவங்கள் விவரங்களைச் சரிபாா்த்து கருத்துக்கூற அரசியல் கட்சி பிரமுகா்களுக்கும் படிவ விநியோக விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆட்சேபணை இருந்தால் சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் எஸ்ஐஆா் திருத்தப் பணிகளில் படிவங்கள் விநியோகம், அதைத் திரும்பப் பெறப்பட்டதில் புகாா்கள் ஏதும் தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனா்.

இதையடுத்து தற்போது பூா்த்தி செய்த படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இரவு, பகலாக பதிவேற்றும் பணி, கூடுதல் ஊழியா்களை நியமித்து நடைபெறுவதாகவும் அவா்கள் கூறினா்.

தொகுதி மாறியவா்கள், இறந்தவா்கள் ஆகியோருக்கான படிவங்களைத் திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஆவதாகவும், சம்பந்தப்பட்டவா்களின் படிவங்களில் காரணங்களைக் குறிப்பிட்டு திரும்பப் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com