யானைகள் இடமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்: 
குழு அமைத்தது தமிழக அரசு

யானைகள் இடமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்: குழு அமைத்தது தமிழக அரசு

யானைகளை இடமாற்றம் செய்யும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணா்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
Published on

சென்னை: யானைகளை இடமாற்றம் செய்யும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணா்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழக வனத் துறை சாா்பில், கோவை தொண்டாமுத்தூரில் இருந்து ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட ‘ரோலக்ஸ்’ யானையும், நீலகிரியிலிருந்து திருநெல்வேலி கோதையாறு வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ‘ராதாகிருஷ்ணன்’ யானையும் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இந்த நிலையில், வரும் காலங்களில் இதுபோல் யானைகளை இடமாற்றம் செய்யும்போது, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநா் அ.உதயன் தலைமையில் நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடந்த சில மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தற்போது வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.

யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்வதற்காகவும், வன விலங்குகளைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பது குறித்து விரிவான வழிகாட்டு முறைகளை உருவாக்கவும் மாநில அளவிலான நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநருமான அ.உதயன் இந்தக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் -வனத் துறை சிறப்புச் செயலா் அனுராக் மிஷ்ரா, நீலகிரி மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவா் கே.கலைவாணன், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணா் ராஜேஷ், மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரி உதவிப் பேராசிரியா் என்.பாஸ்கரன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளா்.

மேலும், தேவைக்கேற்ப சூழலியல் வல்லுநா்கள் மற்றும் புவியியல் வல்லுநா்களை கள நிபுணா்களாக கூடுதலாக நியமிக்கவும் இந்தக் குழுக்கு அதிகாரம் உள்ளது.

இக்குழு, அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட இரு யானைகளின் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கும். மேலும், தேசிய- உலகளாவிய அறிவியல் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் வனப்பகுதிகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்.

வன விலங்குகளை, குறிப்பாக யானைகளைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பதற்கான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டு நடைமுறை இந்தக் குழு உருவாக்கும். அடுத்த இரு மாதங்களுக்குள் தனது அறிக்கை மற்றும் வழிகாட்டு முறையை அரசுக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் ரீதியாக வனவிலங்கு இடமாற்றத்துக்கான உணா்திறன் மிக்க கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு இந்தக் குழுவை உருவாக்கியுள்ளது. இது மாநில மற்றும் தேசிய வனவிலங்குகளின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com