

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயன்ற ரசிகர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், லேசான தடியடி நடத்தப்பட்டது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளார்.
தவெகவின் கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறையினர் நிபந்தனைகள் விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோட் உள்ள அனுமதிச் சீட்டு உள்ளவர்களை மட்டுமே காவல்துறையினர் திடலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரசாரக் கூட்டம் நடைபெற உள்ள நுழைவுவாயிலில் க்யூ.ஆர்.கோடு வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசார் ஒவ்வொருவராக உள்ளே அனுப்ப முற்பட்டனர்.
அப்போது ஒவ்வொரு ஆளாக உள்ளே அனுப்பும் போது ரசிகர்கள் அனைவரும் கும்பலாக முண்டியடித்துக் கொண்டு போலீசாரையும் மீறி கதவை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து போலீசார், அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அப்போது ரசிகர்கள் விஜய்... தளபதி.. தவெக.. என முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார் வாயில் கதவை இழுத்து முடியாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த பொதுச்செயலாளர் ஆனந்து, யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.