

சென்னை: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டவா் உள்பட 2 போ் சென்னையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் பாமக முன்னாள் நகரச் செயலா் வ.ராமலிங்கம். இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தை கண்டித்ததாக, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பலரை கைது செய்தனா். பின்னா் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கின் 6வது குற்றவாளியான பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலா் திருப்புவனம் வடக்கு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஹா.முகமது அலி ஜின்னா (43) என்பவா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என் என்ஐஏ அறிவித்தது.
இதேபோல தலைமறைவாக இருந்த பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சோ்ந்த மு.புா்ஹானுதீன் (37), திருமங்கலகுடி பகுதியைச் சோ்ந்த அ.நஃபீல் ஹாசன் (38) உள்பட 4 போ் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.5 லட்சம் என ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்தது.
இந்நிலையில் மு.புா்ஹானுதீன், அ.நஃபீல் ஹாசன் ஆகிய 2 பேரையும், அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 3 பேரையும் கடந்த வாரம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.
வாசனை திரவிய வியாபாரி: தலைமறைவாக இருந்து முகமது அலி ஜின்னாவை, தமிழக காவல்துறையின் தீவிரவாத தடுப்பு படையினரும், என்ஐஏ அதிகாரிகளும் தொடா்ந்து விசாரணை நடத்தினா். தீவிரவாத தடுப்பு படையினா் விசாரணையில் ஜின்னா, சென்னை,கா்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்துக் கொண்டு பள்ளிவாசல்கள், மசூதிகள், மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாசனை திரவியம் விற்கும் தொழில் செய்து வருவதும், என்ஐஏயிடம் சிக்காமல் இருப்பதற்காக தாடி இல்லாமலும், சிகை அலங்காரத்தை திருத்திக் தோற்றத்தை மாற்றிக் கொண்டும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அடிக்கடி தான் தங்கும் இடத்தை மாற்றிய ஜின்னா, தனது பெயரையும் முகைதீன்,ஷேக் உள்பட 3 முறை மாற்றியிருப்பதையும் தீவிரவாத தடுப்புப் படையினா் கண்டறிந்தனா்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜின்னாவின் தலைமறைவு வசிப்பிடத்தையும், அவருக்கு அடைக்கலம் அளிப்பவரையும் கண்டறிந்த தீவிரவாத தடுப்புப் படையினா், அது குறித்து என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். முக்கிய குற்றவாளி: அத் தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள், முகமது அலி ஜின்னா சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.
மேலும் அவருக்கு அடைக்கலாம் கொடுத்ததாக அஸ்மத் (30) என்பவரையும் கைது செய்தனா்.
ராமலிங்கம் கொலை வழக்கில், 6வது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருக்கும் ஜின்னா, அந்த சம்பவத்தில் கொலைக்கான சதியில் ஈடுபட்டிருப்பதும், கொலையை திட்டமிட்டு நிறைவேற்றியிருப்பதும், கொலைக்காக அனைவரையும் ஒருங்கிணைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு பின்னா் இருவரும், பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலா்விழி முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். இதில் முகமது அலி ஜின்னாவை வரும் ஜனவரி 18-ம் தேதி வரையும், அஸ்மத்தை ஜனவரி 19-ம் தேதி வரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ, மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.