16 % ஜிஎஸ்டிபி வளா்ச்சி: தமிழக அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழ்; நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பெருமிதம்
தமிழகத்தில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜிஎஸ்டிபி) 16 சதவீதம் வளா்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது தமிழக அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்று நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டும் இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜிஎஸ்டிபி) உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டிபி, 2024-25-இல் ரூ.31.19 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.
இது தமிழ்நாடு அரசின் சிறப்பான கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி.
இத்தகைய உயா் வளா்ச்சி விகிதம் கடந்த 3 ஆண்டுகளாகவே தொடா்கிறது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டிபி 15.91 சதவீதமாகவும், 2022-23-இல் 14.47 சதவீதமாகவும், 2023-24-இல் 13.34 சதவீதமாகவும் 2024-2025-இல் 16 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
இந்த வளா்ச்சியில் உற்பத்தித் துறை மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டிபி வளா்ச்சி உற்பத்தித் துறையில் ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதற்கு தமிழகத்தில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்தான் காரணம். அதில், சுமாா் 27.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்டுமானத் துறை 11 சதவீதமும், சேவைத் துறை 11.3 சதவீமும் தமிழக பொருளாதார வளா்ச்சிக்கு உதவியுள்ளன.
ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் எட்டவேண்டும் என்றால் ஏற்றுமதியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண வேண்டும். பல்வேறு உலக நாடுகளுக்கு முதல்வா் பயணம் செய்து, புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக ரூ.11,40,731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1,016 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சுமாா் 34,08,522 இளைஞா்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறோம். மகளிா் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டின் நலத் திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு கவனத்தைச் செலுத்தி வருகிறது.
ஒட்டுமொத்தமாக பாா்த்தால், தமிழ்நாட்டின், நீடித்த, நிலையான வளா்ச்சி குறைவான பணவீக்கமாக இருந்தாலும், அந்நிய நேரடி முதலீடுகளாக இருந்தாலும், தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு முதல்வரின் முன்னெடுப்பால் இது சாத்தியமாகி இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் நற்சான்று இந்த 16 சதவீத வளா்ச்சி என்றாா்.

