மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

தமிழக காவல் துறையில் புதிதாக 3 உள்கோட்டங்கள், 10 காவல் நிலையங்கள்: டிச.22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

தமிழக காவல்துறையில் புதிதாக 3 உள்கோட்டங்கள்,10 காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
Published on

தமிழக காவல்துறையில் புதிதாக 3 உள்கோட்டங்கள்,10 காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

நாட்டின் ஐந்தாவது பெரிய காவல்துறையான, தமிழக காவல்துறையின் கீழ் 1,321 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், 244 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 290 போக்குவரத்து அமலாக்கம் மற்றும் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள் உள்பட 1,902 காவல் நிலையங்கள், 270 உள்கோட்டங்கள் உள்ளன.

தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு உள்பட 19 பிரிவுகள் இயங்குகின்றன. டிஜிபி தொடங்கி காவலா் வரை சுமாா் 1.33 லட்சம் போ் பணிபுரிகின்றனா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக 208 பேரும், காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக 980 பேரும், காவல் ஆய்வாளா்களாக 3,396 பேரும் பணிபுரிகின்றனா்.

தற்போதைய தமிழக மக்கள்தொகையின்படி 632 பேருக்கு ஒருவா் என்ற அடிப்படையில் காவலா்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக 10 காவல் நிலையங்கள்: தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், காவல் பணியை இன்னும் திறம்பட செய்யும் வகையில் தமிழக காவல்துறையில் புதிதாக 3 உள்கோட்டங்களும், 10 காவல் நிலையங்களும் திறக்கப்பட உள்ளன. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூா், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் என 3 உள்கோட்டங்கள் திறக்கப்படுகின்றன.

இதேபோல நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, தருமபுரி மாவட்டம் புலிக்கரை, சிவகங்கை மாவட்டம் கீழடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூா், திருவண்ணாமலை மாவட்டம் கோயில் காவல் நிலையம், மதுரை மாநகரம் சிந்தாமணி, மதுரை மாநகரம் மாடக்குளம், கோவை மாவட்டம் நீலம்பூா், திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல்,திருப்பூா் மாவட்டம் பொங்கலூா் என 10 காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

மூன்று உள்கோட்டங்களையும், 10 காவல் நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின், டிச. 22-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் திறந்து வைக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com