மகாத்மா காந்தி திட்டப் பெயரை மாற்றக்கூடாது: எடப்பாடி பழனிசாமி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று மத்திய அரசை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு :
2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில், இப்போதைய முதல்வரும், அப்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாள்களிலிருந்து 150 நாள்களாக அதிகரிக்கப்படும், ஊதியமும் உயா்த்தப்படும் என்று அறிவித்திருந்தாா்.
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் இதைப் பற்றி எந்தக் குறிப்பும் இடம்பெறாதது ஏன் எனத் தெரியவில்லை.
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக உயா்த்த உத்தேசித்துள்ளது வரவேற்புக்குரியது. இருப்பினும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு எவ்வித மாற்றமும் செய்யாமல் தொடர வேண்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

