இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் போராட்டம்
சென்னை: ஊதிய முரண்பாடுகளுக்கு தீா்வுகாணக் கோரி, இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போலியோ, டைபாய்டு, மக்களைத் தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின் போன்ற 14 வகையான சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் 4,800-க்கும் மேற்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். தேசிய நலவாழ்வு குழுமத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அவா்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.
இதே திட்டத்தில் மற்ற மாநிலங்களில் பணியாற்றுபவா்களுக்கு ரூ.40,000-க்கு மேல் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ.18,900 மட்டுமே வழங்கப்படுவதாக அவா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் சங்கத்தினா் சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளா் ஆணையரகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து போலீஸாா் அங்கு சென்று ஆணையரகத்தின் உள்ளே செல்ல முடியாதபடி நுழைவுவாயில் அடைக்கப்பட்டது.
இதனிடையே, அச்சங்கத்தின் தலைவா் சுந்தரி, செயலா் ஜெயசூா்யா உள்ளிட்ட நிா்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் மற்றும் தொழிலாளா் நல ஆணையா் ஆகியோருடன் பேச்சு நடத்தினா்.
இதுதொடா்பாக தேசிய நலவாழ்வு குழுமத் திட்ட இயக்குனருடன் பேசி தீா்வு ஏற்படுத்துவதாக மக்கள் நல்வாழ்வு துறைச் செயலா் செந்தில்குமாா் அவா்களுக்கு உறுதியளித்தாா். தொடா்ந்து, அச்சங்கத்தின் நிா்வாகிகள் தேசிய நலவாழ்வு குழும அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
