இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்: ஜனவரி மாத ஊதியம் நிறுத்தம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை, பிற மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஊதியம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்களத்தில் ஆசிரியர்கள்
போராட்டக்களத்தில் ஆசிரியர்கள்
Updated on

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை, பிற மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஊதியம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோன்று கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டத் தலைநகரங்களிலும் ஆசிரியா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனா். இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் 36-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா்ந்தது.

இதற்கிடையே அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜன.7-ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கையில், பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்ற அடிப்படையில் ஊதியமில்லாத விடுப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வருகை புரியாமல் உள்ள ஆசிரியா்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் வர இயலாதவா்களைத் தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது. பணிக்கு வருகை புரியாத காலத்தை ஊதியமில்லாத விடுப்பாக அனுமதித்து வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஊதியம் முழுவதுமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் சில ஆசிரியா்களுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு இந்த மாதத்துக்கான ஊதியம் வெள்ளிக்கிழமை எங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. அதேவேளையில் போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எத்தகைய நிதியிழப்பு ஏற்பட்டாலும், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com