

நமது நிருபர்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற பரப்புரை பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொங்கலுக்குப் பிறகு அவரிடம் நேரில் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. அந்த விசாரணை விஜய்யிடம் அவரது இடத்தில் நடத்தப்படுமா அல்லது விசாரணைக்காக அவர் நேரில் அழைக்கப்படுவாரா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.
நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நிலையில், பேரணி நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியைப் பார்வையிட்டு அங்கு எண்ம முறையில் காட்சிகளைப் பதிவு செய்தும் சம்பவ நாளில் பதிவு செய்யப்பட்ட காணொலி காட்சிகளையும் சிபிஐ மற்றும் அதன் தடயவியல் குழுவினர் பகுப்பாய்வுக்கு உள்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோரும் கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் தில்லிக்கு டிசம்பர் 29}ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு சிபிஐ தனித்தனியாக அழைப்பாணைகளை அனுப்பியது.
3 நாள் விசாரணை: அதன்பேரில் கடந்த டிச.29}ஆம் தேதி காலை 10 மணிக்கு தில்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்காக ஆஜரானார்கள். முதல் நாள் விசாரணை 8 மணி நேரம் நடந்தது.
இதையடுத்து, டிச.30-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இரண்டாம் நாளிலும் அவர்களிடம் சுமார் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் புதன்கிழமை ஆஜராகுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஜரான அவர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் முடிவில் அவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தவெக இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் கூறியதாவது:
மூன்று நாள் விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் எங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சட்டத்துக்கு உள்பட்டு பதில் வழங்கினோம். சம்பவ நாள் காணொலி காட்சிகள், ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினோம். தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்புமா என கேட்கிறீர்கள். அது தவறான தகவல். புரளி, ஊக அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாக சந்திப்போம். மீண்டும் ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறவில்லை. ஒருவேளை அழைத்தால் மீண்டும் ஆஜராவோம் என்றார்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது வேலுச்சாமிபுரத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், கரூருக்கு முன்பு நடிகர் விஜய் புறப்பட்ட இடத்தில் இருந்து பேரணி நடந்த இடத்துக்கு வருவதற்கு இடையிலான அவரது பயணத்திட்ட ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மைக்கு பொறுப்பு வகித்தவர்கள் தொடர்பாக அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், நடிகர் விஜய் பயணம் செய்த வாகனத்தில் பதிவான வெட்டப்படாத காட்சிகள் தொடர்பாகவும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இந்தப்பின்னணியில் நடிகர் விஜய்யிடம் பொங்கலுக்குப் பிறகு விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.