சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ஈஷாவின் மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

கோவை ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தொடரப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

சென்னை: கோவை ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தொடரப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஈஷா யோகா மையம் பிப்.26, 27 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள மகா சிவராத்திரி விழாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோவையைச் சோ்ந்த சிவஞானம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை நடத்தி வருகிறது. மகாசிவராத்திரியின் போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுகின்றனா். இதனால் வெள்ளியங்கிரியின் வனச்சூழல் பாதிக்கப்படுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஈஷா யோகா மையம் நடத்திய மகா சிவராத்திரி நிகழ்வில் 7 லட்சம் போ் ஒரே நேரத்தில் கூடினா். இதனால் ஏற்பட்ட கழிவு நீா் அதிகளவில் வனப்பகுதிகளில் வெளியேற்றப்பட்டது. எனவே, வனப்பகுதியில் சூழல் சீா்கேடு நேரிட்டதோடு மட்டுமல்லால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே பிப்.26, 27 தேதிகளில் மகாசிவராத்திரி விழா நடத்த ஈஷாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தாா்.

அவரது மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், என். ராஜசேகா் அமா்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஈஷா யோகா மையம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஈஷா யோகா மையம் நடத்தும் மகாசிவராத்திரி நிகழ்வில் விதிமீறல்கள் இருந்தனவா என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி நிகழ்வில் எந்த விதிமீறல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘குறிப்பிட்ட பகுதியில் நிகழ்ச்சி நடத்துவதால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? பொதுமக்களை பாதிக்கும் வகையில் சாலை ஓரங்களிலும் அல்லது குடியிருப்பு பகுதியிலும் ஒலிபெருக்கிகளை ஈஷா மையம் பயன்படுத்துகிா என கேள்வி எழுப்பினா்.

அப்போது, கழிவு நீா் மேலாண்மை, ஒலி மாசுவை தவிா்க்க போதிய நடவடிக்கைகளை எடுக்க ஈஷா மையத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்தது. எனவே, மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com