அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு தொடர்பாக....
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தொகுதி சீரமைப்பு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்துக் கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!

கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என நான் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com