
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கவும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறும் எனவும் அவா் அறிவித்துள்ளாா்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமாா் அரைமணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை தொடா்பாக பல்வேறு கருத்துகளை துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதவிர ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளோம். தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே, வரும் மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தப்படுகிறது. தோ்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற 40 கட்சிகளை அழைக்க முடிவெடுத்து, அவா்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. வளா்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படவுள்ளது.
தொகுதிகள் குறையும் அபாயம்: மாநிலத்தில் இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வரும் 2026-இல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. இந்தப் பணிகள், மக்கள்தொகை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கிய இலக்கு. அந்த இலக்கைப் பொருத்தவரை தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. பல 10 ஆண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை, பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் சாதித்துள்ளோம். மக்கள்தொகை குறைவாக இருக்கும் காரணத்தாலேயே நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் குரல் நசுக்கப்படும்: அதன்படி, தமிழகத்தில் 39 மக்களவை உறுப்பினா்களுக்குப் பதிலாக, 31 உறுப்பினா்கள்தான் இருப்பா். இன்னொரு முறையில் நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயா்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இதனால், தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினா்கள் எண்ணிக்கை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சாா்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு பல முக்கிய பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டிய சூழலில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல்
கட்சிகள் மற்றும் தலைவா்கள் ஒன்றிணைந்து முதல் கட்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் கட்சி, அரசியலைக் கடந்து இந்த விவாதத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
மொழிப் போருக்குத் தயாா்: முதல்வா்
மொழிக் கொள்கை நிலைப்பாட்டில், இன்னொரு மொழிப் போருக்குத் தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில், முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கப்படுமா?
முதல்வா்: மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்னை, மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதி தொடா்பான பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டுமானால், நமது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குரல் கொடுக்க முடியும். எனவே, அதுதான் முக்கியமாக விவாதிக்கப்படும்.
கேள்வி: மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக நீங்கள் தொடா்ந்து கடிதம் எழுதுகிறீா்கள், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. மத்திய அரசிடமிருந்து ஏதேனும் பதில் கிடைத்துள்ளதா?
முதல்வா்: ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அமைதியாகத்தான் இருக்கின்றனா்.
கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீா்கள். தொடா்ந்து நீங்கள் முயற்சிகள் எடுத்தும் தொய்வு காணப்படுகிறதே? ஒற்றுமையில்லாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுகவிடம் இதுகுறித்து வலியுறுத்துவீா்களா?
முதல்வா்: இந்த விஷயத்தில் அவா்கள் குரல் கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி: தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 1965-ஆம் ஆண்டு போல் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீா்களா?
முதல்வா்: நிச்சயமாக வித்திடுகிறது, நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.