ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை

ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை நடத்தி வருகிறார்கள்.
 கைதான ஞானசேகரன்
கைதான ஞானசேகரன்
Published on
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி உள்ளிட்டோரிடம் சிறப்பு விசாரணைக் குழு நேரில் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டியிருக்கும் நிலையில், கோட்டூரில் உள்ள ஞானசேகரன் வீட்டில் இன்று காலை முதல் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஞானசேகரன் வீட்டில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தின் போது ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பியை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது, சென்னை பெருநகர காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். பல்கலைக்கழக நிா்வாகிகள், ஊழியா்கள், காவலாளிகள், பணியாளா்கள் ஆகியோரிடம் விசாரணை செய்தனா். மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, மாணவியின் பெற்றோா், பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த மாணவா் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

189 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 139 கண்காணிப்பு கேமராக்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன, அவற்றில் எத்தனை கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன, மாணவி விவகாரத்தில் சிக்கிய நபா் எந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டாா் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சேகரித்துக் கொண்டனா்.

அடுத்தகட்டமாக, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று காலை அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.