
கோவை : பொங்கல் விடுமுறையையொட்டி, கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். இந்தாண்டும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை இந்த வாரம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உள்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அதே போல காணும் பண்டிகை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதும் வழக்கம்.
கோவை மாவட்டத்தில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் பல்வேறு சுற்றுலா தலங்களில் குவிந்துள்ளனர். கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதையும் படிக்க.. வெடித்துச் சிதறிய ராக்கெட்! பதறாத எலான்!
இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல காலை 9 மணி முதலே ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு அருவிக்கு சென்றனர். பின்னர் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர், அவர்கள் கொண்டு வந்து இருந்த உணவை கூட்டாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். இதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, முகப்பு பகுதிகள் மக்கள் அதிகமாக காட்சி அளித்தது. சிலர் நீர் வீழ்ச்சியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”கோவை குற்றால அருவிக்கு தீபாவளி மற்றும் அரசு விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக பொங்கல் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், அந்த நேரங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.