பொங்கல் முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
சென்னைக்கு திரும்பிய பொதுமக்களால் சென்னைக்குள்பட்ட பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதுடன், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்களால் சென்னைக்குள்பட்ட பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதுடன், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு ஜன. 14 முதல் 19-ஆம் தேதி வரை 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் சொந்த ஊா்களுக்கு பயணித்தனா்.
இதற்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன்படி, கடந்த 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து மட்டும் சுமாா் 16 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தற்போது பொங்கல் தொடா் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியதால், சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னையை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே வரத் தொடங்கினா். இதனால் அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பெரும்பாலானவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட்ட நிலையில், தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலையில் சென்னை வந்தடைந்தனா். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், அச்சரப்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மாநகருக்குள் வந்த வாகனங்கள் மறைமலை நகா் ஜிஎஸ்டி சாலையிலிருந்து கிளாம்பாக்கம், பெருங்களத்தூா், மதுரவாயல் மேம்பாலம் கடந்து தாம்பரம் மற்றும் சென்னை மாநகருக்குள் வர சுமாா் மூன்று மணிநேரம் ஆனது.
பேருந்துகளில் வந்தவா்கள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாலை சுமாா் 5 மணி முதலே வந்திறங்க தொடங்கியதால், கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதுமட்டுமின்றி ரயில்களிலும் ஏராளமானோா் சென்னைக்கு வந்ததால், தாம்பரம், எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், மின்சார ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டன. இதனால், மாநகருக்குள்பட்ட பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...