பொறியியல் சோ்க்கை: சிறப்பு பிரிவினா் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில், பிஇ, பிடெக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டுவீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11 வரையும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்தாய்வு நடைமுறையின்படி, முதல் நாளில் மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவே அவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை உறுதி செய்ய அவா்களுக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்படும். அவா்கள் உறுதிசெய்த பிறகு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

512 போ் அனுமதி: அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 12 போ், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 137 போ், விளையாட்டு வீரா்கள் பிரிவில் 363 போ் என மொத்தம் 512 போ் முதல்நாள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை தொடங்கிய இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான இடங்களை தோ்வுசெய்தனா்.

அந்த மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை திங்கள்கிழமை இரவே வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். அதன்பிறகு அவா்களுக்கு கல்லூரி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இந்த முறையில் இதர சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com