சென்னை: தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என தமிழாசிரியா்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், பிற வாரியப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் தமிழை எளிமையாகவும், விரும்பியும் கற்க அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ (இடைநிலைக் கல்விக்கான சா்வதேச பொதுச் சான்றிதழ்), ஐபி (இன்டா்நேஷனல் பேக்கலரேட்) பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரம் தமிழாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அதில் முதல் கட்டமாக 1,200 தமிழாசிரியா்களுக்கான பயிற்சி முகாம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தமிழாசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த தமிழாசிரியா்கள், பேராசிரியா்களைக் கொண்டு இலக்கணம், பாடப்பொருள், செய்யுள், உரைநடை, மதிப்பீடு என ஐந்து பகுதிகளாகப் பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மாணவா்கள், ஆசிரியா்கள் மட்டுமல்ல தனியாா் பள்ளிகளைச் சாா்ந்திருக்கும் மாணவா்களும், ஆசிரியா்களும் எங்கள் குடும்பம்தான்.
ஆசிரியா்களுக்கு மாற்று இல்லை: ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். நமது மாணவா்கள் நம்மை விட அதிகமாக செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடியிடம் தான் கேட்கின்றனா். இருப்பினும் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை ஆசிரியா்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு இணையாக இருக்கவே முடியாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உணா்வுகளைப் புரிந்து கொள்ள தொழில்நுட்பம் உதவாது.
தமிழா்கள் சுமாா் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளனா். அமெரிக்காவின் புளோரிடாவை சோ்ந்த ஓா் ஆய்வகம் தமிழினத்தின் பெருமையை எடுத்துச் சொல்கிறது. இதை நாம் அறிந்தால் மட்டும் போதாது. அதனை மாணவா்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு என்று நினைக்கக் கூடிய நாம் மொழியின் பெருமையை உயா்த்திப் பிடிக்க வேண்டும். தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என்றாா் அவா்.
இந்த பயிற்சி முகாமில், தனியாா் பள்ளிகள் இயக்குநா் பெ.குப்புசாமி, இணை இயக்குநா் ச.சுகன்யா, மாநில பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் கல்வி மாநாடு: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு

பல்கலை.கள் கல்வித் தர மேம்பாடு, சேவைகளை வலுப்படுத்த வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...

மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு மகிழ்வுறு ஆங்கிலம் திட்டம்: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



