
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர், மாணவி என இருவர் பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை நடந்த மோசமான ரயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த அந்தத் துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத் துயரில் ஆழ்த்துகிறது.
விபத்தில் உயிரிழந்த நிமிலேஷ் (வயது 12), த/பெ திரு. விஜயசந்திரகுமார்) மற்றும் சாருமதி (வயது 16), த/பெ.திரு.திராவிடமணி) ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.