
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர்.
இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். ரயில் வரும்போது அவர் கேட்டை மூடவில்லை என்று கூறப்பட்டது.
இதுதொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் என 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விபத்துக்கு கேட் கீப்பர்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
ரயில்வே கேட்டை மூடாமலேயே, கேட்டை மூடிவிட்டேன் என்று கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் விபத்து நடந்தபின்னர் பங்கஜ் சர்மாவே, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, விபத்து நடந்துள்ளதைக் கூறியுள்ளார். மேலும் தான் கேட்டை மூடவில்லை, தவறான தகவல் அளித்துவிட்டேன் என்றும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார். ரயில்வே குரல் பதிவு கருவில் இந்த உரையாடல் பதிவாகியுள்ளது.
முன்னதாக, வேன் டிரைவர்தான் கேட்டை திறக்கச் சொன்னதாக ரயில்வே, முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
தற்போது விசாரணையின் மூலமாக கேட் கீப்பர்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.