
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்க மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக எனது கடவுச்சீட்டை தேடியபோது அது காணாமல் போனது தெரியவந்தது. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். என் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, எனது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, 4 வாரங்களில் சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.