சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்றையநாள் திறந்து வைத்தார். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல், தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.
இதில் ஒரு நூலகக் கட்டடம் 500 சதுர அடி பரப்பளவில் என 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 352 நூலகக் கட்டடங்கள் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 24 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில்
70 லட்சம் ரூபாய் செலவில் 1050 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலகத்திற்கான புதிய கட்டடம் மற்றும் பேருந்து நிலையங்கள் / மருத்துவமனைகள் / மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 49.78 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்கள், என மொத்தம் 29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிக்க: நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.