இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Annamalai
மாநாட்டில் அண்ணாமலை படம் - யூடியூப்
Published on
Updated on
2 min read

இந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்துக்களுக்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் அண்ணாமலை பேசியதாவது,

''நம் நிலத்தின் கடவுளுக்காக கூடியிருக்கும் கூட்டம் இது. அனைத்து பாரம்பரிய மடத்தின் ஆன்மீகவாதிகளும் பங்கேற்றுள்ளனர். உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் யூதர்கள் 0.2% உள்ளனர். தங்கள் வாழ்வியல் முறையைக் காக்க அவர்கள் 4 நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

பஹல்காமில் இந்து வாழ்வியல் முறையைப் பின்பற்றியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால் சிலருக்குப் பிடிக்கவில்லை. நம் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகள் ஆட்சி செய்கின்றனர்.

வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக ஒன்றுணைந்துள்ளோம். நம் வாழ்வியல் முறையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும். மறுபுறம், ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி இந்த மாநாடு. எங்கள் வாழ்வியல் முறையில் தலையிடாதீர்கள்.

230 கோடி மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். 200 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். 120 கோடி பேர் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர்.

கிறிஸ்தவவர்கள் 120 நாடுகளில் பெரும்பான்மை உள்ளனர். இஸ்லாமியர்கள் 53 நாடுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். எந்த மதத்தையும் சாராதவர்கள் 10 நாடுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், இந்துக்கள் இரு நாடுகளில் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளனர்.

யாருக்கோ பிரச்னை என்று நாம் இருந்துவிடக் கூடாது. நாளை நமக்கு அந்த பிரச்னை வரும். நம் வாழ்வியல் முறையில் இருக்கும் பிரச்னையை நாம் தட்டிக்கேட்கிறோம்.

இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து மதம் அல்லாதவர்களுக்கு வேறு சட்டம் எதற்காக?. 2026 தேர்தலுக்கும் இந்த மாநாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தக் கூட்டம், வாழ்வியல் முறைக்கு எதிரான செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்காக நடைபெறுகிறது.

பாரம்பரியம் மிக்க கோயில்களில் இந்து அறநிலையத் துறை சரியாக செயல்படுகிறதா? பணம் உள்ளவர்களுக்கு ஒரு தரிசனம். இல்லாதவர்களுக்கு ஒரு தரிசனம்.

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இந்த நிலையின்படி, 2050 முடியும்போது உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நிலை உருவாகும் என்று கூறுகின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் தமிழ் வேறு, ஆன்மீகம் வேறு, இலக்கியம் வேறாக உள்ளது. ஆனால், மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு.

கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது. இதனை எப்போது மையப்பகுதிக்கு கொண்டுவரப்போகிறோம். ஒவ்வொரு சஷ்டியின்போது கந்த சஷ்டி பாட வேண்டும்.

நம் பண்டைய கலாசாரத்தை தேடிப் பிடிக்க வேண்டும். ஆய்வுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும். பிரச்னை வரும்போதெல்லாம் நாம் ஒன்று சேர வேண்டும். நாம் யார் என்பதை வெளிப்படையாக காட்ட வேண்டும்.

செல்ஃபி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழித்துவிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறார். இவர்கள் ஓட்டு கேட்டு வருவார்கள். அப்போது நாம் யார் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும்'' எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com