+2 பொதுத் தேர்வு: முதல் முறையாக கணினியில் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி

இன்று +2 பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் முறையாக கணினியில் தேர்வெழுதுகிறார் பார்வை மாற்றுத்திறனாளி
பொதுத் தேர்வு
பொதுத் தேர்வு
Published on
Updated on
2 min read

தமிழகம் முழுவதும், அரசுப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் எம். ஆனந்தன் கணினி வழியாக பொதுத் தேர்வை எழுதுகிறார்.

எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி வருவதாகவும், அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் திருவள்ளுவர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து கணினி வழியில்தேர்வெழுதும் முதல் மாணவராக ஆனந்த் மாறியிருக்கிறார். இதன் மூலம் மற்ற மாணவர்களும் ஊக்கம் பெற்று அடுத்தடுத்து ஆண்டுகளில் பல மாணவர்கள் கணினி வழியாக தேர்வெழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எப்படி நடந்தது இந்த மாற்றம்?

பள்ளி நிர்வாகம் இதுபற்றி கூறுகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி வழியாக தேர்வெழுதியதாக வெளியான செய்தி அறிந்து மாணவர் ஆனந்த், உடனடியாக தட்டச்சு பழகி, தான் படித்தவற்றை கணினியில் தட்டச்சு செய்து பார்த்தார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, கணினியில் தேர்வெழுத அனுமதிக்கும்படி அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்துக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தேர்வுத்துறை அதிகாரிகள், உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவரிடம் பேசி, அவரது திறமையை நேரில் பார்த்து உறுதி செய்துகொண்டு, அவருக்கு ஒரு மாதிரித் தேர்வை நடத்தி அதன் பிறகே, கணினி வழியில் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளனர்.

எப்படி நடக்கும் இந்தத் தேர்வு?

இந்த தேர்வின்படி, ஸ்கிரைப் என்பவர், மாணவருடன் இருப்பார். அவர் வினாத்தாளில் இருக்கும் வினாக்களை மாணவர்களுக்குப் படித்துக் காண்பிப்பார். உடனடியாக அந்த வினாவுக்கான விடையை கணினியில் மாணவர் தட்டச்சு செய்து பதிவு செய்வார். தேர்வு முடிந்ததும், அந்த தேர்வுத் தாள் பள்ளி நிர்வாகத்தால் பிரிண்ட் எடுக்கப்பட்டு, மற்ற தேர்வுத் தாள்களைப் போல அனுப்பிவைக்கப்படும்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுளள்து. தேர்வு மையங்களில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க 8,500 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர், கணினி மூலம் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, மற்றொருவர் உதவியுடன்தான் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத் தேர்வெழுதி வந்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com