
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில், அந்தியூர் நிர்வாகிகளை தொடர்ச்சியாக அதிமுக கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார்.
புகார் தெரிவித்த அந்தியூர் நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தவரை அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகள் தூக்கி வீசி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுக உறுப்பினரே இல்லை, வேண்டுமென்றே பிரச்னை செய்யும் நோக்கில் கூட்டத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்னதாக, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்பதால்தான் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர்ப் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.