மகளிர் நாள்: ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சர்வதேச மகளிர் நாளையொட்டி ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டம் உள்பட பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்-துமை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்-துமை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சர்வதேச மகளிர் நாளையொட்டி ‘பிங்க் ஆட்டோ’ உள்பட பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை (மார்ச்.8) நடைபெறும் உலக மகளிர் தின விழா - 2025-ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 100 மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கு 50 மின் ஆட்டோக்கள், தொழிலாளர் நலத் துறை சார்பில் மகளிருக்கு 100 ஆட்டோக்கள், உட்பட மகளிருக்கு 250 ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடத்தப்படும் மகளிர் அதிரடிப் படையினரின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், நலத் திட்ட உதவிகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு அவ்வையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது - 2025, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் விருது - 2025 உள்ளிட்டவற்றை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார்.

பணிபுரியும் பெண்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்துவரும் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தின் விரிவாக்கம் உள்பட மேலும் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com