மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர், தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்னையல்ல; தென் மாநிலத்தின் பிரச்னை. தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாததால் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடுகிறது.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு 5 தொகுதிகளை இழக்க நேரிடும். கேள்வி எழுப்பினால் தொகுதிகளைக் குறைப்போம் என்ற எதேச்சதிகாரத்தை கையில் எடுக்கிறது பாஜக.
சமூக நீதி என்னும் இடஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை.
ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்.
எங்கள் வரியை வசூலித்துவிட்டு எங்களுக்கு வர வேண்டிய நிதியை முடக்குவதுதான் நாகரீகமா? அநாகரீகத்தின் அடையாளமே மத்திய அரசுதான்.
மாநில அரசுகளை பழிவாங்கும் அரசியலைத்தான் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? எங்களுக்கான நிதியைத் தருவதில் என்ன பிரச்னை? ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் எனக் கூறியதால் மத்திய அரசுக்கு எரிச்சல்.
இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதுதான் பாஜகவின் திட்டம். உயிரே போனாலும் பாஜகவின் பாசிச திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம். இந்தியை வளர்ப்பதற்கு பதிலாக இந்தியாவை வளர்க்கப் பாருங்கள் என மு.க. ஸ்டாலின் பேசினார்.