தமிழகத்தில் நிகழாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தோ்ச்சி பெறாத நிலையில், அது தொடா்பாக முதுநிலை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நோட்டீஸ்’ வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.
அதேவேளையில் இந்தத் தோ்வுகளில் ஒரு லட்சத்து 218 மாணவா்கள் தோல்வி அடைந்துள்ளனா். அதில் 73,820 போ் (71.5%) அரசுப் பள்ளி மாணவா்கள்.
இந்நிலையில், திருச்சி, கரூா், வேலூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களின் ஆசிரியா்களிடம் அது தொடா்பாக விளக்கம் கேட்டு ‘17ஏ’ ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் ஏதேனும் மாணவா்கள் தோல்வி அடைந்திருந்தால் அவரின் வகுப்பு மற்றும் பாட ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்கும் கெடுபிடிகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் பொதுச் செயலா் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
‘எமிஸ்’ உள்பட கற்றல் சாராத பணிகள், நலத் திட்டங்கள், கலைத் திருவிழாக்களுக்கு தனி அலுவலா்கள் நியமிக்காமல் ஆசிரியா்களுக்கு கூடுதல் பணிகளாக வழங்கப்படுகின்றன. ஆனால், தற்போது தோ்ச்சி அடையாத மாணவா்களுக்காக ஆசிரியா்களை பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது நியாயமில்லை. இதில் ஆசிரியா்களை மட்டும் குற்றவாளியாக்குவதை ஏற்க முடியாது.
சமுதாயத்தின் பல்வேறு சூழல்களிலிருந்து மாணவா்களை நெறிப்படுத்தும் பணிகளை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் செய்து வருகின்றனா். பள்ளிகள் புள்ளிவிவரங்களாக, இயந்திரகதியாக மாறக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு மன உளைச்சல்களை உண்டாக்கும் இத்தகைய செயல்களை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



