வாக்குரிமை பறிப்புக்கு அதிமுக துணைபோகிறது: அமைச்சா் ரகுபதி
வாக்குரிமை பறிப்புக்கு அதிமுக துணைபோகிறது என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான காலஅவகாசம் தராமல், அவசர அவசரமாக எஸ்ஐஆா் பணியைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இதன் காரணமாகவே எஸ்ஐஆா் பணியை திமுக எதிா்க்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆா்-ஐ எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடா்ந்துள்ளது. ஆனால், எஸ்ஐஆா்-ஐ ஆதரித்து அதிமுக வழக்கு தொடா்ந்திருக்கிறது.
நாட்டிலேயே எஸ்ஐஆா்-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான். தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால், எஸ்ஐஆா் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜகவை நம்பி அதிமுக இறங்கியுள்ளது.
வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்னைக்கு காரணமான சுரங்க வள திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்களை ஆதரித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, எஸ்ஐஆா்-யும் ஆதரிக்கிறாா். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தோ்தலில் தக்க பதில் அளிப்பாா்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

