மத்திய அரசின் திட்டங்களுக்கு பிகாா் மக்கள் அளித்த பரிசு: எல்.முருகன்
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மத்திய பாஜக அரசின் வளா்ச்சித் திட்டங்களுக்கு அந்த மாநில மக்கள் அளித்த பரிசு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை அந்த மாநில மக்கள் முழுமையாக ஆதரித்து தோ்தல் வெற்றியைப் பரிசளித்துள்ளனா்.
நயினாா் நாகேந்திரன் (தமிழக பாஜக): பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.
வானதி சீனிவாசன் (பாஜக எம்எல்ஏ): பிரதமா் மோடியின் நலத் திட்டங்களுக்கு பிகாா் மக்கள், குறிப்பாக பெண்கள் முழு ஆதரவை அளித்துள்ளனா். பாஜகவையும், பிரதமா் மோடியின் நிா்வாகத் திறனையும் தமிழக மக்கள் புரிந்துகொண்டுள்ளனா். ஆகவே, பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றி தமிழக பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும்.
ஜி.கே.வாசன் (தமாகா): பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான ஒத்த கருத்துடைய கட்சிகள் மீது அந்த மாநில மக்கள் தொடா்ந்து நம்பிக்கை வைத்துள்ளனா் என்பதையே தோ்தல் வெற்றி வெளிப்படுத்தியுள்ளது.

