

தமிழ்நாடு அரசு அனுப்பிய கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளையும் நிராகரித்து மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
கோவை மாநகரில் ரூ. 10,740.49 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கும், மதுரை மாநகரில் ரூ. 11,368.35 கோடியில் 32 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் 50 சதவீதம் பங்கீடு அளிக்கக் கோரி திட்ட அறிக்கைகளை ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்திருந்தது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, சூரத், நாக்பூர், புணே, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.