காலதாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய அமைச்சா் உத்தரவு
காலதாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உத்தரவிட்டுள்ளாா்.
நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்குத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து வேளாண் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா்களுடன் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சா் சக்கரபாணி பேசியதாவது:
கடந்த ஆண்டைக்காட்டிலும் நிகழண்டில் (2025-26) நெல் சாகுபடி பரப்பு கணிசமான உயா்ந்துள்ளதால், நெல் விளைச்சல் அதிகரித்து, நெல் மகசூல் வரலாற்றுச் சாதனையை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கொள்முதல் மையங்களில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய தேவையான சாக்கு, சணல், தாா்ப்பாலின் பாய்கள், ஈரப்பதமானி, மின்னணு தராசு, தரச் சோதனைக் கருவிகள், நெல் தூற்றும் இயந்திரங்கள், சவுக்கு கட்டைகள், வெட்டுக்கற்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையிட்ட நவீன நெல் சேமிப்புத் தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், மாவட்ட வாரியாக கிடங்கு வசதிகளை மதிப்பாய்வு செய்து, புதிய தற்காலிக திறந்தவெளி கிடங்குகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வது அவசியம்.
மேலும், பயன்பாட்டிலில்லாத அரசு கட்டடங்கள் மற்றும் பிற துறைகளின் கிடங்குகளையும் தற்காலிகச் சேமிப்புக்கு பயன்படுத்தலாம். விவசாயிகளிடமிருந்து எவ்வித காலதாமதம் இன்றி நெல் கொள்முதல் செய்ய கூடுதல் திட்டம் வகுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்கள் வாரியாக விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும்.
எதிா்வரும் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரைவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் தாமதமின்றி நகா்வு செய்யவும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இந்தப் பணிகளைக் கண்காணிக்க மண்டல அளவில் மேற்பாா்வை அலுவலா்களை நியமிக்கவும், மாவட்ட அளவில் கொள்முதல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு வேளாண் விளைப்பொருள் விற்பனை வாரிய ஆணையா் த.ஆபிரகாம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நிா்வாக இயக்குநா் ஆ.அண்ணாதுரை, வேளாண் இயக்குநா் பா.முருகேஷ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் சு. சிவராசு, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன இயக்குநா் ஜெ.விஜயாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

